திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திரிதலா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ பொது கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக எனது மகன் ஆதவைத் மனவை வீட்டின் அருகில் உள்ள ஆரிக்காடு அரசு எல்பி பள்ளியில் சேர்த்துள்ளேன்.

அதற்கான விண்ணப்பத்தில் ஜாதி, மதம் என்ற கேள்விக்கு நான் ‘இல்லை’ என்று பதிலளித்துள்ளேன். எனது மகன் பெரியவனான பிறகு அதை முடிவு செய்து கொள்ளட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரை போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ராஜேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘ எனது குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதி, மதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. மாநிலத்தின் பந்தி போஜனம் நூற்றாண்டு விழா கொண்டாடும் சமயத்தில் இதை செய்ததற்காக பெருமை அடைகிறேன்’’ என்றார்.

பந்திபோஜம் என்பது கேரளாவில் பல தரப்பட்ட ஜாதி மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடப்படும் திருவிழாவாகும். தற்போது 100வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ் மேலும் குறிப்பிடுகையில், ‘‘எனது இளைய மகள் பிரியா தெத்தா கிழக்கு யாக்கரா அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கப்பட்டார். எனது மூத்த மகள் நிரஞ்சனா பாலக்காடு மொயான்ஸ் பெண்கள் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். நான் எனது மகள்ளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்துள்ளேன்.

எனது எம்பி பதவிக்கு கேந்திர வித்யாலயாவில் வழங்கப்படும் ஒதுக்கீட்டை விட்டுக் கொடுத்துள்ளேன். அதுவும் அரசு நடத்தும் பள்ளி தான். ஆனால் அங்கு மலையாளம் பயிற்றுவிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த இளம் தலைவர்களின் செயல்பாட்டிற்கு பேஸ்புக்கில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர்களை முன்னுதாரணமாக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.