செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக, வாட்ஸ்அப் சமூக வலைதளம் மூலம் வதந்தி பரப்பிய நபரை திருவண்ணாமலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

குழந்தைளை கடத்த வடமாநிலங்களில் இருந்து 100 பேர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்திருப்பதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வந்தது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்கிற வயது முதிர்ந்த பெண்மணி, பொதுமக்களால்  அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் மீண்டும் குழந்தை கடத்தல் கும்பல் குறித்த வதந்தி பரவியது.

இதையறிந்த சைபர் கிரைம் போலீசார், வதந்தி பரப்பியவர் யார் என்று ஆய்வு செய்து வந்தனர். அதில்,‘திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே  ஆப்பில் புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பது தெரிய வந்தது.

வீரராகவன் இருப்பிடத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் அவரை அதிரடியாக  கைது செய்தனர். மேலும் வீரராகவன் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு சரக டிஎஸ்பி குணசேகரன், கைதானவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். வதந்தி பரப்பிய நபரை திருவண்ணாமலை போலீசார் முதல் முறையாக கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.