திருச்சி:

ணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி, மணப்பாறை பகுதியைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான பிரிட்டோ கலாமே தம்பதியினரின் 2வயது குழந்தை சுர்ஜித் வில்சன், அவர்களின் வீட்டு அருகே விவசாயத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 அடி ஆழம்ன  ஆழ்துளை கிணறு அமைத்திருந்தனர். தற்போது, அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அதை உபயோகப்படுத்தாமல் விட்டு விட்டனர். அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டடி நிலையில், வீட்டில் இருந்த சுர்ஜித்வில்சன் மாலை நேரத்தில், ஆழ்துளை கிணறு இருந்த சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கலாமேரி, குழந்தை கிணற்றில்  சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அவர்களால் முடியாத நிலையில்,  இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த எந்திரங்களில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆழ்துளை கிணற்றை சுட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே விராலிமலையில் இருந்து 108 ஆம்புலன்சும் அங்கு வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தும் வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டிநடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி உள்ளிட்டோரும் அங்கு வந்து பார்வையிட்டு, குழந்தையை மீட்பதற்கான ஆலோசனைகளை வழங்கி பணிகளை முடுக்கி விட்டனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து வந்த மணிகண்டன் தலைமையிலான குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.  இதற்கிடையில், குழந்தையை மீட்க கோவையில் இருந்து மேலும் ஒரு குழுவும் வந்து முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தை 12 நேரத்திற்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் இருப்பதால் தொடர்ந்து சுவாச கருவி மூலம் சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது.  குழந்தை சுவாசிப்பது நவீன கருவியின் மூலம் பதிவாகியுள்ளது சற்று நிம்மதியை அளிக்கிறது.  மேலும் குழந்தையை மீட்க மீட்பு குழுவினர் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சிகள் மேற்கொண்ட வருகின்றனர்.

இதற்கிடையில் save sujith என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.