சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை தேடி வருகின்றனர்.

நாடு முழுவதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் சில ஆண்டுகளாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே வருகிறது.

சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திருந்த ஒடிசா தம்பதியினர்,  ரயில் வர பல மணி நேரங்கள் இருந்த நிலையில், அங்குள்ள  6வது பிளாட்பாரமில் படுத்து  தூங்கிவிட்டனர். அப்போது அவர்களத 3வயது குழந்தை விழித்தெழுந்து, விளையாடி கொண்டிருந்தான்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர், அந்த குழந்தையை தூக்கி சென்றுள்ளார். இதுகுறித்து ஒடிசா தம்பதியினர் சென்ட்ரல் காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

அதையடத்து, குழந்தையை கடத்திச்சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக  திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் செல்லும் நபரின் வீடியோக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அதையடுத்து,  குழந்தையை கடத்திச் சென்ற நபர் நள்ளிரவு 12.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பிறகு அந்த மர்ம நபர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.