விசாகப்பட்டினம்

ருத்தரித்து 24 வாரங்களில் பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை கருவில் உருவாகி 20 வாரங்களுக்குள் வெளிவரும் போது கருச்சிதைவு எனவும் 28 வாரங்களுக்குப் பின்னும் 36 வாரங்களுக்கு முன்பும் பிறக்கும் போது குறைப் பிரசவம் எனவும் அழைக்கின்றனர்.   அப்படிப் பிறந்த குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம் ஆகும்.    ஆனால் 24 வாரங்களில் பிறந்த குழந்தையை காப்பாற்றி பிழைக்க வைத்த அதிசயம் விசாகப் பட்டினத்தில் நடந்துள்ளது.

விசாகப் பட்டினத்தை சேர்ந்த பெண் நாகலட்சுமி.   இவருக்கு குழந்தை பிறக்காததால் செயற்கை கருத்தரிப்பு முறையின் மூலம் கர்ப்பம் ஆனார்.   இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள மைக்யூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   இவருக்கு கருத்தரித்து 24 வாரங்களில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.   பிறக்கும் போது வழக்கமாக குழந்தைகள் 2.5 லிருந்து 3 கிலோ வரை எடையுடன் இருக்கும்.  ஆனால் இந்தக் குழந்தை 650 கிராம் மட்டுமே இருந்தது.     இந்தக் குழந்தையை மருத்துவர் சாய் கிஷோர் பாதுகாத்து வந்தார்.

பிறந்த இந்தக் குழந்தை இன்குபேட்டர் எனப்படும் கருவியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.    கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்த இந்தக் குழந்தையின் உடல் உறுப்புக்கள் நன்கு வளரத் தொடங்கி உள்ளன.   அத்துடன் சரியாக இயங்கி வந்துள்ளன.    தற்போது முழு வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் குழந்தை சாதாரண குழந்தைகள் மருத்துவப் பிரிவுக்கு மாற்றப் பட்டு எந்த உபகரணமும் இன்றி தானாகவே சுகமாக உள்ளது.

குறைப் பிரசவத்தால் கருப்பை பாதிக்கப்பட்டதால் இனி நாகலட்சுமிக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர் அறிவித்துள்ள நிலையில் இந்தக் குழந்தை உயிர்பிழைத்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.    இது போல ஒரு குழந்தை பிழைப்பது மிகவும் கடினம் எனவும் இது மருத்துவ அதிசயம் எனவும் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.