சென்னை:
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று திடீரென சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.
இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திடீரென ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்றார். இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் பரபரப்பு அடைந்தது. மருத்துவர்கள் முதல் செவிலியர்கள், வார்டு பாய் உள்பட அனைவரும் தங்களது பணியை சிரமேற்கொண்டு செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை வந்த கிரிஜா, தனது வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பினார்.
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியன் போன்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜாவும் சிகிச்சை பெற்று சென்றது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகள் தரமானதாகவும், தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்பட்டு வருவதை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதி படுத்துகினறன.
இதுபோல தமிழக அரசு ஊழியர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளை நாடினால், மருத்துவமனையும் சுகாதாரத்தோடு உயர்வு பெறும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைகள் தடுக்கப்படும்.
முன் வருவார்களா ஆட்சியாளர்கள், அதிகாரிகள்…..