சென்னை: சென்னையில் தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலைமை என்ன, மழைநீர் தேங்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும் சில இடங்களில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டது. இந்த நிலையில்,  நன்மங்கலம் ஏரிக்கு சென்றடைய மழை நீர் கால்வாய் அமைக்க பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணா நிதி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி,குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இருந்து செல்லும் மழை நீர் புத்தேரி வழியாக நன்மங்கலம் ஏரிக்கு சென்றடையும் வகையில், தற்காலிக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். மேலும் நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறிம் உபரி நீர் கீழ்கட்டளை வழியாக நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அகலப்படுத்துவதையும் ஆய்வு மேற்கொண்டார்.  சேலையூரில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்வாய் பீர்க்கன் கரணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாய் பணி, இரும்புலியூர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டன்கால்வாய் பணி, மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள பாப்பன் கால்வாய் அடையார் ஆறு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

தலைமைச்செயலாளருடன், மாவட்ட வெள்ள தடுப்பு அதிகாரி ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமலக் கண்ணன், ஆணையர் இளங்கோவன், செயற் பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.