காபூல்:

ல் கொய்தா பயங்கரவாத அமைப்பின்  இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலியானார். இதை ஆப்கானிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது.


அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின்  இந்திய தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்தார். அங்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் அல்கொய்தா அமைப்பை கூண்டோடு காலி செய்ய ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க படையினர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அமெரிக்க மற்றும் ஆப்கன் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் உமர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா காலா மாவட்டத்தில் செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 23ம் தேதி இரவுகளில் அல்கொய்தா தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது  இந்த அதிரடி தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இதில், அல்கொய்தா தீவிரவாதிகள் 6 பேர் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநகரம் அறிவித்துள்ளது. அதில்,  அல்கொய்தாவின் இந்திய தலைவரான அசிம் உமர் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தானை தாயகமாக கொண்ட அசிம் உமர், இந்தியாவில் பிறந்தவர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தை வழிநடத்த உருவாக்கப்பட்டவர் தான் உமர் என்றும், இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத படைப்பிரிவுக்கு உமர்தான் தலைமை பொறுப்பாளர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.