சென்னை: கொரோனா நோய் தொற்று நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் வழக்கமாக துணைமுதல்வர் ஓபிஎஸ்-சும் கலந்துகொள்ளும் நிலையில், இன்றைய கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தொற்று பரவல் அதிகம் உள்ள 10 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்தில் தொற்று பரவல் 5,86,397 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 1,64,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழகத்தில் நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு அதிகரித்தாலும் இறப்பு விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும் குணமடைவோர் விகிதமும் 90 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள 8வது கட்ட ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக காலை காலை 10 மணிக்கு இந்தஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களின்போது, முதல்வருடன் துணைமுதல்வர் மற்றும் துறை அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், இன்றைய முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதை துணைமுதல்வர் ஓபிஎஸ் தவிர்த்துள்ளார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று 5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், முதல்வர் வேட்பாளர் பதவி தொடர்பாக முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே காரசாரமான நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், இன்றைய முதல்வரின் கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக மீண்டும் உடைவது உறுதியாகி உள்ளது. பாஜகவின் கைப்பாவையாக ஓபிஎஸ் செயல்படுவதாக எடப்பாடி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.