சென்னை: பட்டண பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பபெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதீனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின் போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து நான்கு வீதிகளில் ஆதீன திருக்கூட்ட அடியவர்கள், சிஷ்யர்கள் சுமந்து சென்று அருளாசி வழங்கவைப்பது பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் வழக்கமாகும்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த இந்த ஆண்டு தமிழகஅரசு தடை விதித்துள்ளது, இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் தடையை மீறி பட்டண பிரவேசம் நடத்துவோம் என ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் அறிவித்துள்ளன. தமிழக பாஜக உள்பட இந்து அமைப்புகளும் களத்தில் குதித்துள்ளன. இதற்கிடையில் அந்த ஊர் மக்களும் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள ‘பட்டினப்பிரவேசம்’ பல்லக்கு நிகழ்ச்சியை அரசு தடை செய்ததை கண்டித்தும், தடையை வாபஸ் பெறக்கோரியும் தருமபுரம் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தருமபுர ஆதீன ஸ்ரீமத் சுப்ரமணிய தம்பிரான், “பக்தர்கள் அன்போடு சுமக்கும் செயலுக்கு சீர் பாதம் என்ற மற்றோரு பெயரும் உண்டு. இங்கு சிவனாக போற்றப்படும் குருமார்களை சாதாரணமான மனிதனோடு ஒப்பீடு செய்வது ஏற்க இயலாத ஒன்று” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் ஆன்மீக பேரவை அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் இந்து அமைப்புகள் தடையை மீறி நிகழ்ச்சியை நடத்துவோம் என்று அறிவித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்து மக்களை ஒன்று திரண்டும் முயற்சியில் பல அமைப்புகள் களமிறங்கி உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தருமபுர ஆதீன பட்டண பிரவேசம் தொடர்பாக தமிழக முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும், நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் சுமூக முடிவு எடுப்பார் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நடக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மே 22ஆம்.தேதி திட்டமிடப்பட்டிருந்த தருமபுர ஆதீன பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு மீண்டும் அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தடை உத்தரவை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ திரும்ப பெறவுள்ளதாகவும், தகவல் எந்த பிரச்னையும் எழாமல் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படும் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.