சென்னை: கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது, சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காரணம், ஆசிரியரின் பாலியல் தொல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில்,பள்ளி முதல்வர்மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அவரை கைது செய்ய காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாணவி தற்கொலை குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என குறிப்பிட்டுள்ளார்.