திருச்சி:  திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்றும்,. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன்  உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருச்சிக்கு வந்தார். அவருக்கு  வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்ச ஸ்டாலின்,  மொத்தம் ரூ.625.76 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, ரூ.238.41 கோடி செலவில் 5635 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.308.29 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.

மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு மணப்பாறை மொண்டிப்பட்டியில், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2-வது அலகினையும். மணப்பாறை சிப்காட் வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சியில் சிறிய விழாவாக இருந்தாலும், அது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். தற்போது புதிய புதிய துறைகளில் முதலீடுகள் நாம் ஈர்த்துவருகிறோம். தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. அமைச்சர் அன்பில்மகேஷ் தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். அதேபோல அமைச்சரவைக்கு புதியவரான உதயநிதி, அமைச்சரான போது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதற்கெல்லாம் தனது செயல்பாடுகளால் அனைவரது பாராட்டையும் உதயநிதி பெற்றார். உதயநிதிக்கு இளைஞர்கள் நலன், விளையாட்டு, சிறப்பு திட்டகள் செயலாக்கத்துறை போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழக இளைஞர்கள் தயாராக ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். உலக தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைத்தவர் கலைஞர். பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை. தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்த அரசு விழா மக்கள் நல்வாழ்வு விழாவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை ஒருங்கினைத்து செயல்படுத்திய அனைவருக்கும் எனது நன்றி. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், மணிமேகலை விருது, முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது. பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக நமது ஆட்சி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.