சென்னை: தீபாவளிக்கு பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமென 4 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மாசு காரணமாக, பட்டாசு தொழிலுக்கும், விற்பனைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள பச்சை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பட்டாசு தொழிலாளர்களின் து வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் – தேசிய பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
