சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார்.  10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது  பயண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கனவே 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 5வது முறையான  இந்த ஆண்டு லண்டன், ஜெர்மனி பயணமாகிறார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வரும் முதலமைச்சர்  ஸ்டாலின், அவ்வப்போது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியும், வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே, கடந்த  2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள்  போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  2023-ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள்  போடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு (2024)    ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.  பின்னர், 2024ம் ஆண்டு  ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்குச் சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5-வது முறையாக வெளிநாடு செல்கிறார்.  இந்த முறை லண்டன், ஜெர்மனி நாடுகளுக்கு 10 நாட்கள்  30-ம் தேதி செல்ல உள்ளார்.  30ந்தேதி முதல் 8ந்தேதி வரையிலான அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது.

பயண விவரங்கள்:

ஆகஸ்ட் 30: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்

ஆகஸ்ட் 31: ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்.

செப்டம்பர் 1: ஜெர்மனியில் இருந்து லண்டனுக்குப் பயணமாகிறார்.

செப்டம்பர் 2 அல்லது 3: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோரைச் சந்தித்து உரையாடுகிறார்.

செப்டம்பர் 4: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

செப்டம்பர் 6: லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 7: லண்டனில் இருந்து சென்னைக்குத் திரும்பப் புறப்படுகிறார்.

செப்டம்பர் 8: அதிகாலையில் சென்னை வந்தடைகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சரின்  வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.