சென்னை: தமிழக அரசு தயாரித்து வரும் வலிமை சிமெண்டை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார்.
தமிழகத்தில் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் கடுமையாக விலை ஏறி உள்ளது. அதே வேளையில் மற்ற மாநிலங்களில் விலை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.500ஐ தாண்டி விற்பனை ஆனதால், விலையை குறைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. பின்னர் அரசின் தலையீட்டால் விலை குறைக்கப்பட்டு ரூ.440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது,
இதையடுத்து, சிமெண்ட் விலைக் குறைப்புக்காக வலிமை என்ற பெயரில் தமிழக அரசு சிமெண்ட் அறிமுகம் செய்யும் என்றும் இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தியை உயர்த்தி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் வலிமை சிமெண்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள சிமெண்ட் மூலம் வெளிசந்தையில் சிமெண்ட் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.