சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ந்தேதி கேரளா செல்கிறார். அப்போது, முல்லை பெரியாறு அணை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படும்.
அந்த வகையில், தென் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் செப்.3-ம் தேதி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. இதில், தமிழகம், புதுச்சேரி,கேரளா, ஆந்திரா, தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு மத்திய உள்துறைஅழைப்பு விடுத்துள்ளது.
இதை ஏற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு முதல்வர் ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு அன்றைய தினம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது, முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக செப்டம்பர் 1-ம்தேதி திருப்பூர் செல்லும் அவர், அங்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, அன்றே சென்னை திரும்புகிறார்.
அதையடுத்து செப்டம்பர் 2-ம் தேதி கேரளா செல்லும் அவர், 3-ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, சென்னை திரும்புகிறார்.
தொடர்ந்து, செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சென்னையில் நடைபெறும் புதுமைப்பெண் திட்டம், மாதிரி பள்ளி, தகைசால் பள்ளிகள் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் பங்கேற்கிறார்.
பின்னர், செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி செல்லும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்று, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்று இரவு திருநெல்வேலியில் தங்கும் அவர், மறுநாள் 8-ம் தேதி திருநெல்வேலி ஹைகிரவுண்டில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மறுநாள் 9-ம் (செப்டம்பர் 9ந்தேதி) தேதி வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு, சென்னை திரும்புகிறார்.
இதுதவிர, செப்டம்பர் 15-ம் தேதி சாத்தூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா, தொடர்ந்து நடைபெறும் பள்ளி சிற்றுண்டி தொடக்க விழா ஆகியவற்றிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.