சென்னை: கிண்டி கத்திப்பாரா, சென்ட்ரல் சதுக்கம் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் பயணம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மேலும் வளர்ச்சி பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வுசெய்து வருகிறார்.
அதன்படி, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலந்தூருக்கு பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, சென்னை ஆலந்தூர் அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவர், அங்கு கட்டப்பட்டு வரும் 31 தளங்கள் கொண்ட சென்ட்ரல் சதுக்கம் கட்டுமான பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் 1.45 லட்சம் சதுர அடியில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் ஹாட்ஸ்பாட் ஆக இருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காரணத்தினால் 31 தளங்கள் கொண்ட இந்த பன்னோக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சென்ட்ரல் சதுக்கத்தின் கீழ்தளத்தில் 500 கார்களும் 1,000 இருசக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய அளவுக்கு வாகனங்கள் நிறுத்தம் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே தரை தளத்திற்கு கீழுள்ள கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டன. தரை தளத்திற்கு மேல் எப்படி அழகு படுத்துவது, மக்களுக்கு கூடுதலான வசதிகளை ஏற்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.