சென்னை: நேற்று நள்ளிரவு டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்பட பலரை சந்திக்கிறார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினருக்கும் திமுக சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமா மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருக்கு மேள, தாளங்கள் முழங்க, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இதையடுத்து, இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்த மனுவுடன் மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து மதியம் 1.45 மணி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிமுதல்வர் சந்திக்க உள்ளார்; பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர்களது அறைகளில் சந்தித்து பேசுகிறார்.
பின்னர் வரும் 2ஆம் தேதி டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். திறப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.