சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 நாட்களுக்கு பிறகு இன்று தலைமைச்செயலகம் செல்கிறார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடை பெற்ற அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ந்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 18ந்தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வீட்டில் இருந்தே காணொளி காட்சி மூலம் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சுமார் 10 நாட்களுக்கு பிறகு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தலைமைச் செயலகம் செல்கிறார். அங்கு இன்று காலை 11 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.  வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங் கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் மற்றும் நிதித்துறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ள  ஜிஎஸ்டி கூட்டம் மற்றும் நிதித்துறை குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் மதுரையில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் மீதான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும் என கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.