சென்னை:  தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக, தமிழக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதல்வராக ஸ்டாலின், மே 7ந்தேதி முதல்வராக பதவி ஏற்றார். ஸ்டாலின் பதவி ஏற்றக்காலக்கட்டத்தில், கொரானா தீவிரமாக பரவியதால், அதை தடுக்கும் முயற்சியில் அயராது பாடுபட்டு வருகிறார். இதனால், டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விரைவில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக பிரதமர் மோடி, உள்துறைச்அமைச்சர் அமித்ஷா உள்பட சில மத்தியஅமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
முதல்வராக பதவியேற்ற பின், முதன்முறையாக டெல்லி வரும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி.,. ஸ்டாலின் சந்தித்து தொடர்பாக  மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும், முதல்வரின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது.  டில்லி வரும் முதல்வர், இரண்டு நாட்கள் தங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.