சென்னை: தமிழக சட்டமன்ற வளாகத்தில் இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.


கடந்த ஆண்டு (2021) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்த காட்சி

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம்  18-ம்தேதி  தொடங்கியது. அன்றைய தினமே 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து, 21, 22 மற்றும் 23-ம் தேதிகளில், பட்ஜெட்  மீதான விவாதம் நடைபெற்றது.  24ந்தேதி  இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தனர். அப்போது பல்வேறு சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன. ஆனால் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறவில்லை.

இதையடுத்து, மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி   துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர்  இன்றுடன் (மே 10 ஆம் தேதி) முடிவடைகிறது. கடந்த 21 நாட்கள் சட்டமன்ற அமர்வு நடைபெற்று வந்த நிலையில், இன்று 22வது நாள் கடைசி அமர்வில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் வெளியிடுகிறார். சட்டமன்ற மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விழா மலரை  பெற்றுக் கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது. கருணாநிதியின்  உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.