சென்னை: இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது மத்தியஅரசு என்பது போல மாயையை உருவாக்குகிறது திமுக அரசு என நயினார் நாகேந்திரன் விமர்சித்த துடன், பேரவையில் முதல்வரே கோஷம் போடுவது இதுதான் முதன்முறை என்றும் கூறினார்.

வக்பு வாரிய திருத்த மசோதா  மக்களவையில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டு சுமார் 12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று (மார்ச் 3ந்தேதி) அதிகாலை 2மணி அளவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இன்று மாலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.  இந்த மசோதா காரணமாக  முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகள் இனி வக்ஃப் ஆக கருதப்படாது.

இந்த மசோதாவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவும் கடுமையாக எதிர்த்து வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததுடன், சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றம் எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து உரையாற்றினார்.

அப்போது,   வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் தலைமையில் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் பதாதைகளுடன் மத்தியஅரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன்,  பொதுவாக,  எதிர்க்கட்சியினர்தான் கருப்பு பேட்ஜ் அணிந்து  சபைக்கு வருவார்கள். ஆனால், இங்கு ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து  வந்துள்ளனர். இது  தேவையற்றது.

“சட்டமன்றத்தில் முதலமைச்சர் கோஷம் எழுப்புவது இது தான் முதல் முறை” “நீதி வழங்க வேண்டிய முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் எப்படி?”

மத்தியஅரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர்.  தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வஃபு மசோதாவை,   இஸ்லாமியர் களுக்கு எதிரான மசோதா என்பது போன்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு, குறை ஏற்பட்டால் சொல்லலாம். ஆனால் மாநில  திமுக  அரசு மத்திய அரசை இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு அரசாங்கம் என்பது மாயை போல உருவாக்கி வாக்கு வங்கி அரசியலை தேடிக்கொண்டிருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. வேதனைக்குரியது.

 குறிப்பாக சட்டமன்றத்தில்  ஆளும் திமுகவினரே கோஷம் போட்டது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.

இவ்வாறு கூறினார்.