சென்னை: பிரபல பாடரும், நடிகருமான மறைந்த மாணிக்க விநாயகம் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் (வயது 73) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 26ந்தேதி) மாலை 6.45 மணிக்கு காலமானார். இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மாணிக்க விநாயகம் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மறைந்த மாணிக்கம் விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திருவான்மியூரில் உள்ள மாணிக்க விநாயகத்தின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் அங்கு வைக்கப்பட்டிருந்த மாணிக்க விநாயகம் உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, முதல்வருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடனிருந்தார்.
மறைந்த மாணிக்க விநாயகம் உடல் இன்று மாலை 4 மணியளவில் கோட்டூர்புரத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.