சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 2877 அரசு காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள பணியிங்களை ஒப்பந்த நிறுவனம் மூலமாக நிரப்பி வந்த நிலையில், தற்போது மேலும் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து சார்பில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் உள்பட 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தமாக 20 ஆயிரத்து 260 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இதில்,பள்ளி மாணவர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. முதியோர்களும் இலவசமாக பயணம் செய்ய டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான இலவச பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே கடலில் மிதக்கும் போக்குவரத்து கழகம் மேலும் கடலில் சிக்கி தத்தளிக்கிறது.
இதனால், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், லும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளை இயக்குவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. போக்குவரத்து துறைக்கு உரிய வருமானம் இல்லாததால், பல கிராமப்புறங்களில் பேருந்து சேவைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது.
டிரைவர் பற்றாக்குறை காரணமாக 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 29 லட்சத்து 70 ஆயிரம் தடவை பேருந்து சேவை தடைபட்டுள்ளது. 8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது. எனவே காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் கேட்டும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2ஆயிரத்து 340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்த நிறுவனம் மூலமாக 234 ஓட்டுநர், நடத்துநர்களைத் தேர்வுசெய்வதற்காக டெண்டர் வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவிதனர். ஆனால், போதுமான அளவு டிரைவர்கள், நடத்துனர்கள் கலந்துகொள்ளாத நிலையே ஏற்பட்டது. இருந்தாலும் தனியார் மூலமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் அரசு நேரடியாக நியமனம் செய்யுமா அல்லது ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யுமா என்பது விரைவில் தெரிய வரும்.
ஏற்கனவே ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர்கள், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு தொழிற்சங்கத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.