சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் காரணமாக 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.
திருச்சி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மேட்டூர் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், ஆட்சியர், அரசுஅதிகாரிகள், கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதையடுத்து, மேட்டூர் அணைப்பகுதிக்கு சென்ற முதல்வவர், குறுவை சாகுபடிக்கான நீர் தேவைக்கு மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

பொதுவாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, இன்று 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிகளை பெறும் வகையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 88ஆவது ஆண்டாக இன்று நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையில் இருந்து முதலில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இது படிபடிப்பாய அதிகரிக்கப்படும் என கூறிய அதிகாரிகள், இன்று மாலைக்குள் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போதைய நிலையிவ்ல 96.81 அடி ஆக உள்ளது., நீர் இருப்பு 60.78 டி.எம்.சி. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1170 கனஅடியாக உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்! என கூறியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel