சென்னை:   முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனை சென்ற நிலையில், அவருக்கு மருத்துவ மருத்துவ பரிசோதனை நடத்தப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது மருத்துவமனையில் தங்கி ஒய்வெடுத்து வருகிறார்.

மருத்துவர்கள், முதல்வர்  ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க  அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம், மக்கள் நல திட்டங்கள் தொடங்கி வைப்பு, திமுக உறுப்பினர் சேர்க்கை என பம்பரமாக சுழன்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் அவரது சகோதரர் மு.க.முத்து மறைவு காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், உடல்நிலை சோர்வாக காணப்பட்டதால்,  இன்று காலை அப்போலோ மருத்துவமனை சென்று வழக்கமான உடல்நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையைத் தொடர்ந்து,   முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த இரு நாள்களுக்கு முதல்வர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், முதல்வர் ஓய்வு எடுக்க அப்போலோ மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,  இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். ஸ்டாலினுக்கு தலை சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இது வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. முதலமைச்சருக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.