சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள், புதிய வாகனங்களை பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்தார்
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் துறைக்கு வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள், நீர்தாங்கி வாகனங்கள் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், 7 அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள், 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி வண்டிகள், மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட அரசு பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், பலமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை சமாளிக்க 54 மீட்டர் உயரம் வரை வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், மலைப்பாங்கான இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை கையாள்வதற்கு நான்கு சக்கர இயக்கம் கொண்ட 7 அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள், தீ விபத்திடங்களில் ஏற்படும் தண்ணீர் தேவையினை உடனடியாக சமாளிக்க 12 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், பழுதடைந்த நீர்தாங்கி வண்டிகளுக்கு மாற்றாக 25 புதிய நீர்தாங்கி வண்டிகள், மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவை 63.30 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஊர்திகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் ப. அமுதா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் என். ப்ரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.