சென்னை:  சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூர் பகுதியில், சுமார்  1 ஏக்கர் நிலத்தில்,   ரூ39 கோடியில் ஹஜ் பயணிகளுக்கு இல்லம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் அமையவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.  இங்க  பிரம்மாண்டமான தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைய உள்ளது.  ஏற்கனவே இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட நிலையில், தற்போது அதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் புனிதப் பயணத்தை தங்கள் வாழ்நாள் கடமைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு வரும் பயணிகள், புனிதப் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகத் தங்கிச் செல்லவும், மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஏற்றவாறு வசதிகளை அளிப்பதே இந்த ஹஜ் இல்லத்தின் முக்கிய நோக்கமாகும்.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அரசு நிலத்தில் இந்த ஹஜ் இல்லம் அமைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 ஹஜ் புனிதப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த இல்லம் வடிவமைக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

[youtube-feed feed=1]