சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 621பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வாணையத்தின் மூலம் பால்வளம், கைத்தறி, சுகாதாரத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 621 பேருக்கு அரசு பணிக்கான நியைமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில், பால்வளத் துறை சார்பில் 64 பேருக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166 பேருக்கும், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான சுகாதாரத் துறையைச் சேர்ந்த 391 பேருக்கும் என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில், நேற்று வழங்கினார்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மருந்தாளுநர்கள், உதவி மருத்துவர் (பொது), உதவி மருத்துவர் (சிறப்பு தேர்வு), ஆய்வக நுட்புநர், இருட்டறை உதவியாளர், களப்பணி உதவியாளர், ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 7,346 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு 1,393 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கு 133 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 8,872 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள் ப.செந்தில்குமார் (சுகாதாரம்), வே.அமுதவல்லி (கைத்தறி), ந.சுப்பையன் (பால்வளம்), ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.