சென்னை: மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

சென்னை புறநகர் பகுதிகளில் மழைவெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், வடசென்னையின் கடைசி பகுதியான மணலி பகுதியில் வெள்ள நீரில் நடந்து சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாகா மாறியது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து வெள்ளப்பாதிப்புகள் குறித்து 4 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் மேலும் பல மாவட்டங்களுக்கு சென்று வெள்ள நிவாரணங்கள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் சென்னை புறநகர் பகுதி மற்றும் கொசஸ்தலை ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

வடசென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ள நீரில் நடந்து சென்று ஆய்வு செய்துள்ளார்.  மணலி புது நகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களையும் நேரில் சென்று சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

மேலும் கொசஸ்தலை ஆற்றுப்பகுதிக்கும் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட எம்எல்ஏக்கள்,  அதிகாரிகள் உடனிருந்தனர்.