சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. மேலும், மழையின்போது, அணைகள் ஏரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல் செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

புழல் ஏரியில் 18.18 அடிக்கு நீா் உள்ளது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2,789 மி.கன அடி நீர் உள்ளது.

இன்று காலை தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் செங்குன்றம் அருகே உள்ள புழல் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.  அணையின் உறுதித்தன்மை, நீர் இருப்பு  குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டார். நீர் இருப்பு, கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நீர் வழிப்பாதையில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும் கரையை பலப்படுத்தவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.