வேலூர்: தேர்தல் பிரசாரத்திற்காக வேலூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சிஎம்சியில்சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2023 டிசம்பர் 6-ஆம் தேத சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அங்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் சிஎம்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துரைதயாநிதிக்கு புனர்வாழ்வு பயிற்சிக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, 2024ம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தற்போது வேலூரில் முகாமிட்டு உள்ளார். , வேலூர், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை ) வேலூருக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 6 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக தனது மனைவி துர்காவுடன் வேலூர் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், நேராக சிஎம்சி மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, மு.க.அழகிரி, அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.