தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள சீவநல்லூர் பகுதியில் கட்டப்பட்டு வரும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார். புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.291 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 83 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 1020 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். முன்னதாக நேற்று மாலை லை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக கோவில்பட்டி வந்தார். கோவில் பட்டியில் நகர தி.மு.க. சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் நெல்லை மாவட்டம் அரிய நாயகிபுரம் சென்று இரவு ஓய்வு எடுத்தார். இதையடுத்து இன்று காலை நெல்லையில் இருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் வந்த அவருக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
அதன் பிறகு ஆய்க்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
அதன்படி, தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ரூ.291 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 83 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மொத்தத்தில் ரூ.1,020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ரூ.22,912 கோடியில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 246 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,074 கோடியில் 37 ஆயிரத்து 221 வளர்ச்சி திட்டபணிகள் நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் ரூ.24,986 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.மு.சுமதி அவர்களிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.

“கலைஞரின் கனவு இல்லம்” திட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் ‘குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவினை நிறைவேற்றும் வண்ணம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிலேயே ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்ட பயனாளிகளின் தகுதித்தன்மையை உறுதி செய்து அப்பயனாளிகளுக்கு இத்திட்டதின் கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மேற்கண்ட கணக்கெடுப்பில் இடம் பெற்று வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத பயனாளிகளுக்கு பட்டா வழங்கியும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியும் வீடற்ற, நிலமற்ற பயனாளிகளின் கனவை இத்திட்டம் நிறைவேற்றியுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான நோக்கம் மற்றும் திட்டத்தின் பயன்கள் விரைந்து மக்களை சென்றடையும் பொருட்டு “பயனாளிகள் தேர்வு செய்தல் முதல் தொகை விடுவித்தல்” வரையிலான அனைத்து நடைமுறைகளும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டதால் தகுதியான பயனாளிகள் வீட்டினை விரைந்து கட்டி முடித்திட சாத்தியமானது. தமிழ்நாடு அரசு இதற்காக முனைப்புடன் செயல்பட்டதால் இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் 2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்டு இன்றையதினம் தென்காசியில் நடைபெற்ற அரசின் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதி அவர்களிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.
இதேபோன்று, 2025-26-ஆம் ஆண்டில், மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுநாள் வரை 16,245 வீடுகள் உடனடியாக முடிவுறும் நிலையிலும், 83,755 வீடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திலும் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் 2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.