ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று காலை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்ததுடன், 16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார்.
.இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்தார். பின்ன்ர கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 62.10 கோடி செலவிலான முடிவுற்ற 17 பணிகளை திறந்து வைத்து,ரூ. 32.89 கோடி மதிப்பீட்டிலான 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.மேலும்,30,423 பயனாளிகளுக்கு ரூ. 360.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து இன்று ராணிப்பேட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடியில் பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கான குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். முதலமைச்சர் திடீரென ஆய்வுக்கு சென்றபோது அரசு விடுதியின் கண்காணிப்பாளர் பணியில் இல்லை. பணி நேரத்தில் விடுதியில் இல்லாத அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். அதன்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சமூகநலத்துறை சஸ்பெண்ட் செய்தது.