சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள, காவலர் சமுதாய நலக்கூடம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், காவல் அலுவலக இணைப்புக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகதத்தில், காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், , 2 காவல் துறை கட்டடங்கள் மற்றும் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்படி சென்னை மாவட்டம் முத்தாப்புதுப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் மானூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் 3 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையக் கட்டடங்கள்.
சென்னை மாவட்டம் ஆவடியில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் சமூதாயநலக்கூடம் மற்றும் தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்.
மொத்தம், 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.