சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக சென்னை சைதாப்பேட்டையில் 10 மாடிகளுடன் புதிய விடுதி கட்டிடம் மற்றும், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள  1000 குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக சென்னை சைதாப்பேட்டையில் 10 மாடிகளுடன் புதிய விடுதி கட்டிடம் மற்றும் 1000 குடியிருப்புகளை சமத்துவ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவினை நனவாக்கும் பொருட்டு சென்னை, நந்தனம், எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன், 121 அறைகளோடு கூடிய 500 மாணவர்கள் தங்கி பயில நவீன வசதியான நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சிக்கூடம், உள் அரங்கு விளையாட்டுக்கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய விடுதி ரூ.44.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ நாளான அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி மாணவர்களின் நலனுக்காக இந்த விடுதி திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்த நாள்-சமத்துவ நாள் விழாவான இன்று காலை 9.45 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள எம்.சி. ராஜா நவீன கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து காலை 10.45 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் புதிய விடுதி, பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள், ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.