சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக  திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அங்கு 2லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை  தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கினார். இன்று மாலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டு இலட்சமாவது மையத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் புகைப்பட விளக்கப் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பார்வையிட்டார்.

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ‘ரீடிங் மாரத்தான்’ என்ற தொடர் வாசிப்பு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற மதுரை மாவட்டத்திற்கு கோப்பையை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, ஆராஞ்சி ஊராட்சியின் தன்னார்வலருக்கு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கையேட்டினை வழங்கினார்.

முன்னதாக திருவண்ணாமலை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,  மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சிவானந்தம் என்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு  , அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து,  கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சிவானந்தம் என்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அவருக்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களை கேட்டறிந்தார்.

அதையடுத்து,  கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு சென்றார். அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும். இதுவரை இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 7.26 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 2 லட்சம் கற்பிக்கும் தன்னார்வலர்கள், 34 லட்சம் கற்கும் மாணவர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் தினமும் 3 லட்சம் மணி நேரம் கற்பிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதையடுத்து திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி  வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின்சிலையை திறந்து வைக்கிறார். இதன் பீடம் 13  உயர பீடித்தில் 8 உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

நாளை காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை அமைச்சர் வேலுவின்  அருணை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில்  கலந்து கொண்டு ரூ.1,103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.

இதில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.674 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ரூ.429 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.