சென்னை: படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன்  அவரது மனைவி உள்பட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ( ஜூலை 5ந்தேதி) மாலை 6மணி அளவில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  இதுதொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து, கூறிய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த விவகாரத்தில்  விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை ஆம்ஸ்ட்ராங் குடியிருந்து வந்த  சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு  நேரில் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  ஆம்ஸ்ட்ராங்  உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

இந்த சந்திப்பு குறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்.” எனத் தெரிவித்துள்ளார்.