சென்னை:
முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட இருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்தானது. விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானம் புறப்பட தாமதம் ஆனதால் வீடு திரும்பினார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார். ஜனாதிபதியிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்று விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.