சென்னை: கோவை கார் குண்டி வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் இன்று விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அந்த காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்த நிலையில், தடயவியல்ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில், காரில் இருந்து பாஸ்பரஸ், ஆணி போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இது காரில் குண்டுவெடிப்பை உறுதி செய்கின்றன. மேலும், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதே வேளையில் இன்று என்ஐஏ அதிகாரிகளும் கோவை வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு உள்பட 8 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழகஅரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவையில் மீண்டும் கார் குண்டு வெடித்துள்ள சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது, கோவை சம்பவம் தொடர்பாக விசாரணை நிலவரம், கைது நடவடிக்கை , அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

என்ஐஏ விசாரணை எதிரொலி: டிஜிபி உள்பட உயர்அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் அவசர ஆலோசனை…