சென்னை:  மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 31 சீதன பொருட்களுடன், இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  இதுவரை 1098 ஜோடிகளுக்கு  திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதியாக  இன்று   2 ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு செலவினங்களை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக,  இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் ஏழை எளியோருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்து சமய   அறநிலையத்துறை  சார்பில் அவ்வப்போது இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்ட வருகின்றன. இதுவரை 1098 திருமணங்கள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் கற்பகாம்பாள் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இரண்டு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு முதலில் மாலைகள் எடுத்து கொடுத்ததும் இரு மணமக்களும் மாலை மாற்றிக்கொண்டனர். அதன் பிறகு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு  அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

இன்று திருமணம் செய்துகொண்ட  மணமக்களுக்கு 4கிராம் தங்கத்தாலி,  தாய் வீட்டு சீதனமாக கட்டில், மெத்தை, ஸ்டவ் அடுப்பு, குக்கர், மிக்சி, கிரைண்டர், சில்வர் பாத்திரங்கள், பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காசோலை – உதவித்தொகை ஆகியவற்றை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.குமரி மாவட்ட கோயில்கள் பராமரிப்புக்காக ரூ.8கோடி மானியம். ஒருகால பூஜை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சர்களுக்கான திட்டம். அர்ச்சர்களின் வாரிசுகள் மேற்படிப்பு படிக்க கல்வி உதவித் தொகையை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார்.

திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தல் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்“ என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 4.12.2022 அன்று சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள்தசார்பில் 25 மணமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 மணமக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவினத் தொகையை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளைச் சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் 7.7.2023 அன்று சென்னை, அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், 34 மணமக்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலும், பிற மாவட்டங்களிலும் திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தப்பட்டன.

“1,100 திருமணங்கள் நிறைவு – “ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள்” : இந்து சமய அறநிலையத் துறை அசத்தல் !
இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2022 – 2023 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 500 திருமணங்களும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 600 திருமணங்களில் 564 திருமணங்களும், ஆகமொத்தம் 1,064 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் திருக்கோயில்கள் சார்பில் பிற மாவட்டங்களில் 34 மணமக்களுக்கும், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 2 மணமக்களுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு மொத்தம் 1,100 திருமணங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.11.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில் களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை சுசீந்திரம் -கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் களின் அறங்காவலர் குழுத் தலைவர் கோ.இராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.

மேலும், ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக வும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4,000/- மற்றும் ரூ.2,000/- மாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும் வழங்கினார்.

* கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.8 கோடி அரசு மானியம் வழங்குதல்

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தின் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகச் செலவினங்களுக்காக தற்போது ரூ.6 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை குறைவாக உள்ள காரணத்தால் மேற்படி திருக்கோயில்கள் நிர்வாக செலவினங் களுக்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை இவ்வாண்டு ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள், சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக 2019- 2020 ஆம் நிதியாண்டு வரை ரூ.3 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 2022ஆம் நிதியாண்டு முதல் அம்மானியத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி, கடந்த 27.12.2021 அன்று வழங்கினார்கள். தற்போது அத்தொகை போதுமானதாக இல்லாததால் இந்த நிதியாண்டு முதல் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒரு கால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட மைய நிதி ஏற்படுத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் / மகள்களின் மேற்படிப்பிற்கான உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.10,000/- அல்லது கல்லூரியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத் தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம். சட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர்.

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை வழங்குதல்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டத்தை கொண்டுவந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளிகளில் முழு நேரம் / பகுதி நேரம் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4,000/- மற்றும் ரூ.2,000/- மாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்பட்டு வரும் அர்ச்சகர். ஓதுவார், வேதாகமம், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்ப பாடசாலை ஆகிய 15 பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர பயிற்சிப் பள்ளிகளில் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,000/- லிருந்து ரூ.4,000/- மாகவும், பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1,500/- லிருந்து ரூ.2,000/- மாகவும் உயர்த்தி அந்தந்த திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும். இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாணவர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.