ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுபோல திமுக எம்.பி. கனிமொழியும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதி உள்ளார்,.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்றுமுதல் மீனவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி பகுதியில் 18-ந்தேதி (நேற்று முன்தினம்) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அவர்களை கைது செய்துள்ளனர்.
அதேபோல 19-ந்தேதி (நேற்று) நடந்த இன்னொரு சம்பவத்தில் கல்பாத்தி அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்தப் போக்கை குறிப்பிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு கடிதங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த ஆண்டில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் 19 தடவை அரங்கேறி இருக்கின்றன. இந்த சம்பவங்களில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களை இலங்கை கடற்படையினர் தர மறுக்கிறார்கள். இந்த ஆண்டில் நடந்த மீனவர் தாக்குதல் சம்பவங்களில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களில் 5 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது, பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர நிச்சயம் அனுமதிக்க கூடாது. எனவே தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தேவையான உடனடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் அதேவேளை இலங்கை கடற்படையினருடன் உடனடியாக பேசி கைதான 55 தமிழக மீனவர்களை விடுவிக்க செய்வதுடன், இலங்கை கடற்படை வசம் உள்ள 73 விசைப் படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டுவர தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு கூறியுள்ளார்.