சென்னை: காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கையை ஏற்று, வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் 4 ஆயிரம் போலீஸார் பயனடைய உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தங்குவதற்கு சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகள் தேவைப்பட்டது. ஆனால், காவலர் குடியிருப்புகளில் வீடுகள் காலியாக இல்லை.
இதையடுத்து, போலீஸாரின் நலன் கருதி தமிழக வீட்டு வசதி வாரியத்தால் அம்பத்தூர், அயப்பாக்கம், சோழிங்கநல்லூர், செனாய் நகர், எம்.கே.பி. நகர், நொளம்பூர் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு குடியேறாமல் இருந்து வரும் காலி அடுக்குமாடி குடியிருப்புகளை, போலீஸாருக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய காவல் ஆணையர் அருண் கடந்த ஆண்டு இறுதியிலும், இந்தாண்டு தொடக்கத்திலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
4000 போலீஸாருக்கு பயன்: அதை ஏற்று வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் போலீஸார் குடியிருப்பதற்கு ஆவண செய்யும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், ‘சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோவை நகரங்களில் உள்ள போலீஸாருக்கான குடியிருப்பு தேவையை பூர்த்தி செய்வதற்கு சென்னை சோழிங்கநல்லூர், மகாகவி பாரதி நகர், அம்பத்தூர், அயப்பாக்கம் மற்றும் கோவை கணபதி நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் போலீஸார் குடியிருப்பதற்கு வகை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பால் சென்னையில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பயனடைய உள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
