மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தன்னை முதல்வராக பதவி ஏற்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவுக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஃபட்நாவிசுக்க நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து பேசியவிட்டு திரும்பிய பட்நாவிஸ் மற்றும் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பார் என்று ஃபட்னாவிஸ் கூறினார். மேலும், ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். தான் அமைச்சரவையில் பங்குகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “சிவசேனையைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 50 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் உதவியால்தான் இந்தப் போரில் ஈடுபட்டோம். இந்த 50 பேரும் என் மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன். பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்காமல் தாராள மனப்பான்மையுடன் பாலாசாகேப்பின் ஊழியனான என்னை முதல்வராக்கியுள்ளார். அவருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாங்கள் எடுத்த முடிவு, பாலாசாகேப்பின் இந்துத்துவா மற்றும் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதியளிக்கிறது. அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்ததால், முன்னாள் முதல்வர் தாக்கரேவிடம் எங்கள் தொகுதியின் குறைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுடன் சென்றோம். பாஜகவுடன் இயற்கையான கூட்டணிக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால், அவர் எங்கள் குறைகளை கேட்க மறுத்து, பாலாசாகேப்புக்கு எதிராக நடந்து கொண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.