சென்னை: மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்தள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டள்ளது. அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சாலிக்கிராமத்தில் உள்ள குமரி அனந்தனின் மகள் தமிழிசையின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தமிழிசையை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியை அறிந்து முதல்வர் தனது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்துக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அவருக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி கவுரவித்தது.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தன் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
