புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவை மார்ச் 2ந்தேதி கூடுவதாக, சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்து உள்ளார். இந்த கூட்டத்தின்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசுகள், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் முடியாத சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 8ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியிலும் மார்ச் 2ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக மார்ச் மாதங்களில் மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதால், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
எனவே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக வருகிற 2-ந்தேதி புதுவை சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டத்தில் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டு உள்ளார்.