நாகர்கோவில்: கடந்த ஆண்டு ரூ.2ஆயிரம் கொரோனா நிவாரணத்தை பெற்ற மகிழ்ச்சியில் பொக்கை வாயுடன் கள்ளம் கபடமின்றி சிரித்து மகிழ்ச்சியை தெரிவித்த, வேலம்மாள் என்ற 90 வயது மூதாட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு முதல்வலர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4ஆயிரம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 15ந்தேதி தொடங்கியது.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில் சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மூதாட்டியின் முகத்தில் தோன்றிய சந்தோஷத்துக்கும், சிரிப்புக்கும் அளவே இல்லை. கள்ளம் கபடமில்லாத, முகம் முழுக்க சிரிப்போடு இருந்த புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த புகைப்படத்தை ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக’ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட நெட்டிசன்களும் புகழ்ந்து தள்ளினர்.
இதன்பிறகு அந்த பாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது தொடர்பான செய்திகளும் வெளியானது. இதையடுத்து நல்உள்ளம் படைத்த சிலர் அந்தபாட்டிக்கு உதவி வருவதாக கூறப்பட்டது. மேலும், அந்த பாட்டிக்கு அரசின் முதியோர் ஓய்வு ஊதியம் பெற ஆவன செய்யப்பட்டு, தற்போது அவர் முதியோர் உதவிக்தொகை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அந்த பாட்டியை சந்திக்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து, அந்த பாட்டியின் சொந்த ஊரான நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதிக்கு சென்று காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவரை அழைத்து வந்தனர். அவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வேலம்மாள் பாட்டியிடம் நலம் விசாரித்தார்.
அப்போது, வேலம்மாள் பாட்டி தனக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெற்று தந்தமைக்காக முதல்வருக்க பாட்டி நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.