சென்னை: உயிர்கொல்லியாக மாறும் ‘நீட்’டில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித்தர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் அமர்வின் கடைசிநாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக, இன்று காலை சபை கூடியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, தொடக்கம் முதலே நீட் நுழைவுத்தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட போது மரண அமைதியில் இருந்தது அதிமுக ஆட்சிதான். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான தெம்பும், திராணியும் அதிமுக அரசுக்கு இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில்தான் நீட் தற்கொலைகள் நிகழ்ந்தன. மாணவர் தனுஷின் தற்கொலைக்கும் அதிமுகதான் காரணம்.
நீட் தேர்வை ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த திமுக அரசு உறுதி பூண்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது. மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வடிவை அறிமுகம் செய்கிறது. மேலும், மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று திமுக வரலாற்று சாதனை புரிந்துள்ளது
சமூகநீதியை உறுதிசெய்யவும், தேர்வினால் பாதிப்புகளாக மாணவர்களை பாதுகாக்கவும், அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளவும் இந்த சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீட் தேர்வால் அனிதா தொடங்கி ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நல்ல முடிவினை தி.மு.க அரசு எட்டும்/
உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை அனைத்து கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி தரவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.