சென்னை: மனிதநேயம் குறித்து பேசிய மாணவன் அப்துல் கலாமுக்கு தமிழகஅரசு வீடு ஒதுக்கி உள்ளது. முன்னதாக மாணவர் அப்துல் கலாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், தற்போது, அவரது குடும்பத்துக்கு புது வீட்டை வழங்கியுள்ளது தமிழக அரசு. அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சமீபத்தில் இணையதள தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மாணவன், மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி இருந்தான். அவனது பேட்டி வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்து பாராட்டி,பரிசளித்தார்.
அப்போது, அந்த சிறுவனின் பெற்றோர், தாங்கள் வறுமை நிலையில், வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த முதல்வர், அந்த சிறுவனின் பெற்றோருக்கு அரசு வீட்டை ஒதுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, , அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில், இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த, அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டதாகவும், நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்க உத்தவிட்டிள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகநூலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாணவன் அப்துல் கலாமின் பெற்றோரை தலைமைச்செயலகத்துக்கு வரவழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவர்களிடம் வழங்கினார்.