சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர், இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி  செலுத்தினார். முன்னதாக நேற்று மாலை  சென்னையில் உள்ள சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட உயர்  அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஎ மைதானத்தில் பிரமாண்டமான பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக நேற்று இரவு சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்வைத் திறன் பாதிப்பு, காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் தனது 70ம் பிறந்தநாளை  கேக் வெட்டி கொண்டாடினர்.

விழாவுக்கு வந்த முதலமைச்ருக்க  சிறப்பு பள்ளி மாணவர்கள் மேல தாளங்கள் முழங்க தவரவேற்பு அளித்தனர். பின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி குறித்த அப்பள்ளி மாணவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதை பார்த்து ரசித்து கவனித்த முதலமைச்சர், அம்மாணவர்களுக்கும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்,  நீங்கள் என் மீது கொண்டிருக்கக்கூடிய அன்பு, என் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, அதேபோல் நான் உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய பாசம், அன்பு, அந்த உணர்வோடு உங்களுக்கு நன்றி சொல்ல, உங்களுடைய வாழ்த்துகளைப் பெற, நான் இங்கு வந்திருக்கிறேன். 1984-லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த பள்ளிக்கு உங்களை காண நான் வருவதுண்டு. ஆனால் தொடக்கத்தில் பிறந்தநாள் அன்று வருவேன்.

இப்பொழுது எல்லாம் பிறந்தநாளுக்கு முதல் நாளே உங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன். காரணம், பிறந்தநாள் அன்று வந்தால் நீண்ட நேரம் உங்களிடத்திலே இருந்து உங்களுடைய கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, தொடர்ந்து நீண்ட நேரம் பெற முடியாது, வேகவேகமாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால் தான் முன்கூட்டியே முதல் நாளே வந்து, ஆறஅமர உங்களிடத்திலே உட்கார்ந்து, உங்களுடன் உரையாடி, கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, உங்கள் வாழ்த்துகளை பொறுமையாக பெற்று செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் முன்கூட்டியே வந்திருக்கின்றேன், உங்கள் வாழ்த்துகளுக்கு ஈடு எதுவும் கிடையாது:  என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து,  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் உள்ளிட்ட இந்திய காவல் பணி அலுவலர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உள்ளிட்ட இந்திய காவல் பணி அலுவலர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.